சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் போலி தகவல்கள் மூலம் இந்திய வாக்களர் அட்டை மற்றும் பிற ஆவணங்களை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கராச்சியைச் சேர்ந்த இஃதிகார் ஷேக் (29) மற்றும் ஆர்னிஷ் ஷேக் (25) ஆகியோர், செல்லுபடியாகும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் நீண்ட கால விசாவுடன் (LTV) இந்தியாவில் தங்கியிருந்தனர். ராய்கர் மாவட்டம், ஜூட் மில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கோடடரை கிராமத்தில் யாகூப் ஷேக் என்பவரின் வீட்டில் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டு நபர்களைக் கண்டறியும் நடவடிக்கையின் போது, இஃதிகார் மற்றும் ஆர்னிஷ் பற்றி தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் பொய்யான தகவல்களை அளித்து வாக்களர் அட்டை மற்றும் பிற இந்திய ஆவணங்களை பெற்றிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 199 (பொய்யான அறிவிப்பு), 200 (அந்த அறிவிப்பை உண்மை என பயன்படுத்தல்), 419 (மாற்று பெயரில் மோசடி செய்தல்), 467 (முக்கிய ஆவண பாகுபாடு), 468 (மோசடிக்காக பாகுபாடு செய்தல்) மற்றும் 34 (பொது நோக்குடன் செய்த குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களுக்கான 12 வகை குறுகிய கால விசா பிரிவுகளுக்கான கால அவகாசம் முடிந்த அதே நாளில் நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பின்னர், இந்திய அரசு பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த புதிய நடவடிக்கைகள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.