
2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறைக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தொகுதி மறு வரையறை திட்டம் என்பது தென்னிந்திய மக்களின் தொகுதிகளை குறைத்து இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்கும் சதித்திட்டமாகும்.
எதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு இருக்கும் என்பதை அமித் ஷா தெளிவுபடுத்தவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்ற கூறுகிறார். அவர் சொல்வது போல அமித்ஷா கூறவில்லை. வாங்குவதற்கு மேல் கூவும் வேலையை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அமித்ஷா ஹிந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை முழுவதும் குழப்பமாகத்தான் உள்ளது. அமித்ஷா சொல்லாத ஒன்றை அவரிடம் இருந்து மைக்கை வாங்கி அண்ணாமலை புது கருத்தை சொல்கின்றார். அந்தக் கருத்து தவறானது. சுருக்கமா சொன்னால் ஏன்பா வாங்குன காசுக்கு மேல கூவுற ஏன்பா, அது மாதிரி வாங்குன காசுக்கு மேல கூவுறாரு அண்ணாமலை என்று ஆ.ராசா விமர்சித்துள்ளார்.