
திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புகாரின் பேரில் சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் (36) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆன்மீக பயணத்திற்காக திருவண்ணாமலை வந்திருந்த இந்த பெண், தனியார் விடுதியில் தங்கி தியானம் மற்றும் ஆன்மிக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மகா தீபம் ஏற்றும் மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு குகையில் தியானம் செய்தால் பலன் கிடைக்கும் என கூறி வெங்கடேசன் பெண்ணை அங்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை நகர போலீசார் விசாரணை நடத்தி, வெங்கடேசனை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஆன்மீக சுற்றுலாவுக்காக இந்தியா வந்ததாகவும், வெங்கடேசன் அவரை பல்வேறு ஆசிரமங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.