
நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, ரூ.3 கோடிக்குக் குறைவான நிலையான வைப்பு தொகைகளுக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை குறைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, புதிய விகிதங்கள் ஏப்ரல் 10, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, பொதுமக்களுக்கு 4% முதல் 7.25% வரை, மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரை FD வட்டி வழங்கப்படுகிறது. முன்னதாக இது பொதுமக்களுக்கு 7.40% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.90% வரை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய விகிதங்களைப் பார்க்கும் போது, 7 முதல் 45 நாட்களுக்குள் முதிரும் FD-க்கு 4% வட்டி வழங்கப்படுகிறது. 46 முதல் 90 நாட்களுக்கு 5.25%, 91 முதல் 179 நாட்களுக்கு 5.5% என வழங்கப்படுகிறது. 180 முதல் 269 நாட்கள் வரை உள்ள வைப்புகளுக்கு வட்டி 6.25%-இல் இருந்து 6.15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு 6.25% வட்டி கிடைக்கும். 1 வருட FD-க்கு 6.85% வட்டி வழங்கப்படுகிறது. 444 நாட்களுக்கு FD வைப்பினருக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி கிடைக்கிறது. 2–3 ஆண்டுகளுக்குள் முதிரும் வைப்புகளுக்கு வட்டி 7.30%-இல் இருந்து 7.15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
3–5 ஆண்டுகளுக்குள் முதிரும் FD வைப்புகளுக்கு வட்டி 7.40%-இல் இருந்து 7.20%-ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு, ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு 4% முதல் 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.3 கோடிக்கும் குறைவான மற்றும் 180 நாட்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு (NRE/NRO மற்றும் CGA தவிர) FD எடுத்தால், 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படும். மேலும், மார்ச் 12, 2019க்கு பிறகு எடுத்த FD-யை முன்கூட்டியே திரும்பப் பெறும் நிலையில், 1% அபராதம் விதிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள், பாதுகாப்பான முதலீட்டை நாடும் வாடிக்கையாளர்களிடையே புதிய சிந்தனைகளை உருவாக்கியுள்ளது.