உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள், தனது ஊழியர்களின் வேலை நடைமுறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் இனிமேல் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும், இதற்கு தயாராக இல்லையெனில், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறை, Google Technical Services மற்றும் People Operations (HR) போன்ற பிரிவுகளில் முதற்கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. அலுவலகத்திலிருந்து 50 மைலுக்குள் வசிக்கும் ஊழியர்கள் இந்த உத்தரவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் அதிக முதலீடுகளைச் செய்யும் நிலையில், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வேலை முறைகளிலும் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஊழியர் மாற்றம், துறைகள் மறுசீரமைப்புகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. Android, Chrome, Nest, Fitbit உள்ளிட்ட பிரிவுகளில் விருப்ப விலகல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.