
பீகார் மாநிலத்தின் பேகுசராய் மாவட்டம் மொசாத்பூர் கிராமத்தில் இடம்பெற்ற கொடூர சம்பவம் மக்கள் மனதை உலுக்கியுள்ளது. தாய்மையை தாண்டி விபரீத ஆசையில் மூழ்கிய ஒருவர், தனது 6 வயது மகனை ஆசிட் குடிக்க வைத்து கொன்றதுடன், அதை மறைக்க முயன்றுள்ளார். லாலன் குஅர் என்ற நபர் இறந்ததற்குப் பிறகு, அவரது மனைவி தனது மகனை அழைத்து ஹுசைனா கிராமத்தில் குடியமர்ந்து, அங்கு ஒரு இளைஞருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரின் காதல் உறவுக்கு சிறுவன் இடையூறாக இருந்ததால், முதலில் தனது மகனை கழுத்து நெரித்து கொல்ல திட்டமிட்ட அந்த தாய், பின்னர் காதலனின் ஆலோசனைப்படி, சிறுவனுக்கு ஆசிட் குடிக்கவைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். சிறுவனின் பாட்டி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். இந்த தகவலின் அடிப்படையில், ரிஃபைனரி காவல் நிலைய போலீசார் அந்த தாயை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் காதலனைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு தாய் இப்படியான செயலைச் செய்ய முடிகிறதா? என சமூக வலைதளங்களில் மக்களிடையே கோபம் மற்றும் வருத்தம் பெருகி வருகிறது. “இந்த தாய்க்கு தூக்கு தண்டனையே சரியான தீர்ப்பு” என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தாயின் ஆசை, குழந்தையின் உயிரைக் கொன்றது என்ற இந்த சம்பவம் நாடெங்கிலும் கலக்கம் ஏற்படுத்தி வருகிறது.