இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் மற்றும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, அக்டோபர் 9 ஆம் தேதி மரணமடைந்தார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.3,800 கோடியாகும். அவரது மரணத்திற்குப் பிறகு, அவர் எழுதி வைத்த உயில் (Will) தற்போது வெளிவந்துள்ளது. இந்த உயிலில், சொத்துக்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதனை மிகத் தெளிவாகவும், மிகச் சமநிலையுடன் குறிப்பிட்டு, அவரின் மனிதநேய மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது சொத்துகளில் பெரும் பங்கை, அவர் ஆரம்பித்த தொண்டு நிறுவனங்களான “ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் ஃபவுண்டேஷன்” மற்றும் “ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்ட்” ஆகியவற்றுக்கு எழுதி வைத்துள்ளார். மக்களுக்காக நல்லது செய்யும் நோக்கத்தோடு, இவை தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவரது சகோதரிகள் ஷிரீன் ஜெஜீபாய், டியானா ஜெஜீபாய் மற்றும் நண்பர் மோகினி தத்தா ஆகியோருக்கும் சொத்துக்களில் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஜூஹூவிலுள்ள வீட்டை இரு பங்குகளாக பிரித்து, அவரின் அண்ணன் ஜிம்மி டாடா மற்றும் மற்ற உறவினர்களான சிமோன் டாடா, நோயல் டாடாவுக்கும் எழுதி வைத்துள்ளார். நீண்டநாள் உதவியாளராக இருந்த சாந்தனு நாயுடுவின் கல்விக்கடனையும், பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுத்த கடனையும் தள்ளுபடி செய்ய உத்தரவு அளித்துள்ளார்.

அவருடன் வேலை செய்த ஓட்டுனர்கள், சுத்தம் செய்த பணியாளர்கள், சமையல்காரர்கள், மற்றும் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய எல்லோருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், யாரும் மறக்கப்படக்கூடாது என்றும் உயிலில் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது செல்ல பிராணிகளான ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் டிடோவுக்கும் மாதம் ரூ.30,000 ஒதுக்கீடு செய்து, அந்த பொறுப்பை சமையல்காரர் ராஜுவிடம் கொடுத்துள்ளார். உயிலின் அனைத்து விபரங்களும், அவரது மருத்துவர் மற்றும் வக்கீல் தவிர, அவர் உயிரோடிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தது, தற்போது அனைவரையும் உருகவைக்கும் வகையில் வெளியாகியுள்ளது.