உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், காவல் துறையில் பணியாற்றும் ஹரிஓம் யாதவ் என்ற கான்ஸ்டபிள், தனது காதலிக்காக தனது மனைவியை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிஓம், ஷாப்பிங் செய்வதாகக் கூறி தனது மனைவி க்ஷாமா யாதவை பைக்கில் அழைத்துச் சென்றார். பிறகு, குவாலியர் பைபாஸ் அருகே பைக்கை எதிர்த்திசையில் ஓட்டினார். அப்போது முன்னால் வரும் லாரியை கண்டதும், திடீரென பைக்கிலிருந்து குதித்து தப்பினார்.

பின்னால் அமர்ந்திருந்த மனைவி விபத்திலிருந்து தப்பினார். இருப்பினும் ஹரிஓம், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றார். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் விரைந்து வந்ததும், கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்தக் கொடூர முயற்சியில் பலத்த காயமடைந்த க்ஷாமா யாதவ் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கண்கள், முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக, கான்ஸ்டபிள் ஹரிஓம் யாதவ், அவரது காதலி பிரியங்கா, மாமியார் நிர்மலா, மாமனார் திவான் சிங் மற்றும் மைத்துனர் வினய் ஆகியோரின் மீது கொலை முயற்சி, வரதட்சணை பிரச்சினை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.