
தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புதிதாக போட்டியிட விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கியுள்ளார். இப்படியான நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கமாக TVK இருக்கும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் ஆங்கில சுருக்கமாக TVK இருப்பதால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். இது தொடர்பாக திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தவாக தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கமாக TVK என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தில் முதலில் நான் தான் பதிவு செய்தேன்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி TVK என குறிப்பிடத் தொடங்கினார். அதன்பிறகு இந்திய தேர்தல் ஆணையத்திடம் யார் உண்மையான TVK என்ற ஆங்கில சுருக்கத்தை பயன்படுத்தலாம் என்பதை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுத்து கூறாமல் இருப்பதன் பின்னணி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில தகவல்களும் வந்துள்ளது. இதனால் முழுமையாக விஜய் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மாற்று அரசியலை கொடுக்க வந்துள்ளாரா அல்லது மற்றவர்களால் வர வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என வேல்முருகன் கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.