தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் கண்டிப்பாக விஜய் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்றும் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சமீபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவின்போது திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணிகளின் அழுத்தம் தான் காரணம் என்று கூறினார்.

ஆனால் இதனை மறுத்த திருமாவளவன் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு நானோ அல்லது விசிக கட்சியோ பலவீனமானவன் கிடையாது என்று கூறினார். அதன் பிறகு அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டதில் தனக்கு எந்தவிதமான சங்கடமும் கிடையாது எனவும் தமிழக வெற்றிக்கழகத்தினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதலோ அல்லது சலசலப்போ கிடையாது என்று கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவனிடம் நிருபர்கள் இனிவரும் காலத்தில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதால் ‌ திருமாவளவன் விஜயுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி  நீடிப்பதாக திருமாவளவன் கூறினார். இப்படி இருக்கையில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு மழுப்பலாக எனக்கு தெரியாது என்று திருமாவளவன் பதில் வழங்கியுள்ளார். மேலும் இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது. இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.