
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை விஜய் தொடங்கிய நிலையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் உட்பட பதவிகள் நியமிக்கப்பட்டு வருகிறது. நாளை நான்காம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட இருக்கிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் பதவி வாங்க 15 லட்ச ரூபாய் பணம் கேட்பதாக முன்னதாக சர்ச்சை எழுந்த நிலையில் விஜய் கடுமையாக எச்சரித்து இருந்தார். அதைத்தொடர்ந்து ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஜாதி பார்த்து பதவி வழங்குவதாகவும் பணத்தை வாங்கிக்கொண்டு பதவி வழங்குவதாகவும் பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். முன்னதாக 10 வருடங்களாக உழைத்தும் எங்களுக்கு பதவி வழங்காமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி பதவி வழங்குகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு பதவி வழங்கப்படுவதால் எங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் ஜாதி பார்த்து பதவி வழங்குவதாக தற்போது பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். அதாவது கடந்த 17 வருடங்களாக தளபதியின் ரசிகராக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி செய்து வருகிறேன். நான் விஜய் கட்சி தொடங்கிய பிறகும் என்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்து வந்த நிலையிலும் எனக்கு ஒன்றிய செயலாளர் பதவியை தரவில்லை. தளபதிக்காக உயிரைக் கூட கொடுக்க தயாராக இருக்கிறேன். மாவட்ட செயலாளர் எனக்கு பதவி வழங்க வேண்டும் என்று கூறிய போதிலும் முருகன் என்பவருக்கு ஜாதி பார்த்து பதவி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட தலைமையிடம் புகார் கொடுத்து பலனில்லை. மேலும் இதன் காரணமாக தலைமையை சந்தித்து நியாயம் கேட்கலாம் என்று வந்தால் உள்ளே கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.