தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. அதன்படி விஜய்க்கு CPRF வீரர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இன்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமியிடம் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறியதாவது, எந்த அடிப்படையில் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கினர் என்பது தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைவராக அவர் இருக்கிறார். ஒரு நடிகராகவும் இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் கண்டிப்பாக கூட்டம் சேரும்.

இதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி தான். அப்படி இல்லையெனில் அரசியல் ரீதியாக விஜய்யை சந்தோஷப்படுத்தி தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் விஜய் திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு மத்திய அரசு ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.