அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் அரசியலில் நீண்ட நெடிய பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் அவரை ஒரு அரசியல் தலைவராக அங்கீகரிக்க முடியும். புதிய புதிய கட்சிகள் உருவாகியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறினார். முன்னதாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.

இது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கும். 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி இல்லை என்றால் தனித்து தான் போட்டியிடுவோம். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதில் எந்தவிதமான உண்மையையும் கிடையாது.

எனவே ஊடகங்கள் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் கண்டிப்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் திராவிட கட்சிகளுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கேபி முனுசாமி புதிதாக கட்சி தொடங்கியவர்களால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது சவாலாக அமையலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் விஜயை தான் அப்படி குறிப்பிட்டு பேசியுள்ளார்.