தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு அரசியல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், விஜய் கட்சி தொடங்கி சில மாதங்கள் தான் ஆகின்றது. அது பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. விஜய் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றார் அவருடைய திட்டங்கள் என்ன என்பதை சில மாதங்கள் பார்த்த பிறகு தான் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியும். பாஜக மற்றும் திமுகவை எதிர்ப்பது தான் விஜயின் கொள்கை என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றார் தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு என்ன செய்யவில்லை என்பதை வெளிப்படையாக பேசினால் அதுதான் கொள்கை. தன்னுடைய முதல் மாநாட்டிலேயே ஆளுநர் தேவையில்லை என்று பேசிய விஜய் பிறகு ஆளுநரை சென்று பார்த்ததன் மூலமாக தன்னுடைய கொள்கையிலிருந்து முரண்பட்டுள்ளார் என்று நன்றாக தெரிகிறது என சரத்குமார் விஜயை பற்றி விமர்சனம் செய்துள்ளார்.