
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் ஹீரோ வேடங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் சத்யராஜ். இவர் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் மற்றும் விஜய் ஆகியோர் ஏன் பெரிய கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கிறார்கள் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, இன்று இருக்கும் நட்சத்திரங்களுக்கு பன்முகத்தன்மை என்பது அரிதாகிவிட்டது. இதற்கு உலகம் வளர்ந்து வருவதே காரணம். நடிகர் விஜய் லவ் டுடே மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற கிளாசிக் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் தற்போது விஜய் நடித்தால் அது எடுபடாது. ஏனெனில் அவர் பெரிய நட்சத்திரமாக மாறிவிட்டதால் அதற்கு தகுந்தார் போன்ற படங்களில் தான் நடிக்க முடியும். அதேபோன்று பாகுபலி படத்தில் நடித்ததால் பிரபாசால் அதுபோன்ற பெரிய படங்களில் தான் நடிக்க முடியும் என்று கூறினார். மேலும் நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் நடித்த நிலையில் விஜயுடன் சேர்ந்து தலைவா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.