
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அஸ்வினி என்ற 19 வயது மாணவி பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஏகாட்டூர் பகுதியில் ஒரு தனியார் விடுதிக்கு சம்பவ நாளில் சென்றார். அதாவது அஸ்வினி தன்னுடைய தோழியை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அதோடு வார விடுமுறையை கழிப்பதற்காகவும் அஸ்வினி அங்கு சென்ற நிலையில் பின்னர் விடிய விடிய அவர் மது குடித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அஸ்வினியை அவருடைய தோழி இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அஸ்வினி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அஸ்வினி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற நிலையில் பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த அஸ்வினி தன்னுடைய தோழியின் அறையில் இருந்து மது குடித்துள்ளார். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தது தான் இறப்புக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.