தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம் தான். ஆனால் இதற்கு முதல்வர் சொன்ன காரணம் தான் ஏற்புடையது அல்ல. பிப்ரவரி மாதத்தில் இருந்து பாம்பன் பாலம் திறப்பு தேதி குறிக்கப்பட்ட வரும் நிலையில் பிரதமரின் வருகை குறித்தும் அவருக்கு முன்கூட்டியே தெரியும்.

ராமநாதபுரத்தில் வெயில் அதிகம் என்பதால்தான் முதல்வர் ஸ்டாலின் இங்கு வராமல் ஊட்டிக்கு சென்று விட்டார். அவர் தொகுதி மறு சீரமைப்பை கூறி ஊட்டிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன.? பிரதமர் மோடியை வரவேற்பது முதல்வரின் முக்கிய கடமை. முதல்வர் தன்னுடைய கடமையை செய்யத் தவறியதால் பாஜக சார்பில் அவரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

முன்னதாக எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை பிரதமர் மோடியின் வருகையை தவிர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஊட்டிக்கு விடுமுறை எடுத்து விட்டு சென்று விட்டார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் தரவில்லை என்பதால் தான் முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்லவில்லை என்று கூறியிருந்தார். அதாவது தொகுதி மறு சீரமைப்பு விவகாரம், நீட் தேர்வு போன்றவைகள் பற்றி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுப்பதற்காக நேரம் கேட்டிருந்த நிலையில் அவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் தரவில்லை.

அதனால்தான் அங்கு செல்லவில்லை என்று ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை தவிர்த்தது கண்டனத்திற்குரியது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.