
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் கந்தாசி பகுதியில், கடந்த ஆகஸ்ட் 13, 2024 அன்று நடந்ததாக கூறப்பட்ட லாரி மோதி உயிரிழந்த சம்பவம், பின்னர் ஒரு திட்டமிட்ட கொலை வழக்காக மாறியது. ஷில்பாராணி என்ற பெண், தனது கணவர் முனிசாமி கவுடா லாரி மோதி இறந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், சில நாட்களில் அதே முனிசாமி கவுடா நேரில் வந்து தனது “மரண காப்பீட்டு” தொகையை பெற உதவி கேட்க வந்ததும், போலீசார் அதிர்ச்சியடைந்து வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கினர்.
பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. முனிசாமி கவுடா மற்றும் அவரது மனைவி ஷில்பாராணி, டிரைவர் சோமேஷ் ஆகியோர், ரஜினிகாந்த் நடித்த சிவாஜி: தி பாஸ் திரைப்படத்திலிருந்து தூண்டுதலாக, மரணத்தை போலியாக உருவாக்கி, 3-4 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெற திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இந்த திட்டத்திற்காக, ஒரு ரக்பிக்கர் (கழிவுப் பொருள் சேகரிப்பவர்) யை இரண்டு மாதங்களுக்கு முன்னரே கவுடா வீட்டில் வைத்திருந்து பராமரித்தார். அவரது ரத்த வகையையும் பரிசோதனை செய்தார். ஆகஸ்ட் 12 அன்று, அந்த ரக்பிக்கரை முதலில் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் லாரி மூலம் உடலை நசுக்கியதை போல காட்டினர். முன்னதாக லாரி டிரைவரை நியமித்து, புதிய லாரியொன்றை கொடுத்து ₹5 லட்சம் வரை பணம் வழங்கியதும் தெரியவந்தது.
ஆனால், அந்த இறந்த ரக்பிக்கரின் அடையாளம் இன்னும் உறுதியாக்கப்படவில்லை என்றும், அவரது குடும்பத்தினரைத் தேடும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், முனிசாமி கவுடா மற்றும் அவரது மனைவி ஷில்பாராணி, டிரைவர் சோமேஷ் ஆகியோர் ஜாமினில் வெளியே உள்ளனர்.இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.