திருத்தணி அருகே கே.ஜி கண்டிகை பகுதியில் பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.

இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதலமைச்சர் அறிவித்த நிவாரண தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.