திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்பதி நகரில் திருநாவுக்கரசு- தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ராம்தர்ஷன்(20). கடந்த 19ஆம் தேதி ராம்தர்ஷன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் ராம்தர்ஷன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். மேலும் தீவிர சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராம்தர்ஷன் மூளைச்சாவு அடைந்தார்.

இவரது இறப்பு பெரும் இழப்பை ஏற்படுத்திய போதிலும் ராம்தர்ஷனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது சிறுநீரகம், கண்கள் போன்றவை கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. ராம்தர்ஷன் இறந்தும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். ராம்தர்ஷனின் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். ராமதர்ஷன் இறப்பு அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.