மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.

இதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வந்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களை மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் குடி அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அல்லாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று போராட்டத்தில் இறங்கினர்.

இதனிடையே நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்துவதற்காக மதுரை விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் தெற்கு தாசில்தார் ஆகியோர் ஜேசிபி வாகனங்களுடன் கிராமத்திற்கு வந்தது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதையடுத்து நூற்றுக்கும் அதிகமான கிராம மக்கள் தியாகி இமானுவேல் சேகரன் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி இளைஞர்கள் நீர்நிலை தொட்டியின் மீது ஏறி போராட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்