சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் ராஜா தனது கடைக்கு குறைந்த விலையில் மொத்தமாக ஜெராக்ஸ் பேப்பர் வாங்க திட்டமிட்டார். இதனையடுத்து கூகுளில் ஒரு விற்பனையாளரின் நம்பரை தேடிப் பிடித்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் தான் அசாமில் இருந்து பேசுவதாகவும், குறைந்த விலைக்கு மொத்தமாக பேப்பர் தருவதாகவும் தெரிவித்தார்.
இதனை நம்பி ராஜா 2000 ரிம் ஜெராக்ஸ் பேப்பர் வாங்குவதற்கு முன்பணமாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் பேப்பரை அனுப்பவில்லை பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து ராஜா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.