ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் ஆணிவேராக இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அதன்பிறகு இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் விராட் கோலி இதுவரை ஒரு போட்டியில் கூட அதிக ரன்கள் குவிக்காமல் ஒற்றை இலக்க ரன்களில் தோல்வியடைந்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி தற்போது உலக கோப்பையில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விராட் கோலி ஒரு தரமான வீரர். அவருடைய முக்கியத்துவம் எங்களுக்கு நன்றாக தெரியும். 15 வருடங்களாக விளையாடும் ஒரு வீரர் ஃபார்மில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒரு பிரச்சனையே கிடையாது. அவர் ஒரு நோக்கத்துடன் விளையாடுகிறார். மேலும் அவர் தன்னுடைய ஆட்டத்தை இறுதிப் போட்டிக்காக கூட சேமித்து வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.