திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் உள்ள 7 வயது சிறுமி கனிஸ்ரீ ரூ.5 நாணயத்தை தவறுதலாக விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவரது பாட்டி கொடுத்த 5 ரூபாய் நாணயத்தை குழந்தை விழுங்க, அது தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

குழந்தை மயங்கி விழுந்ததை கண்ட பெற்றோர்கள் பதற்றத்துடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க முடியாது என கூறினர்.

இதையடுத்து, குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காது, மூக்கு, தொண்டை நிபுணரான மருத்துவர் தீபானந்தன் விடுமுறையில் இருந்தும்  மருத்துவமனைக்கு வந்து சிறுமிக்கு அவசர சிகிச்சை அளித்து நாணயத்தை வெளியே எடுத்தார்.

குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு, அவரது தாயார் லலிதா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.