திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஏரிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி சேகரின் மகன் ரவிக்குமார் (12), இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்த பிறகு தனது தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த வயலை நோக்கி சென்ற சிறுவன், அங்கே விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென விஷப்பாம்பு ஒன்று கடித்தது.

பாம்பு கடித்த உடனே  குடும்பத்தினர் சிறுவனை மீட்டு, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவனின் உயிரை காக்க முடியவில்லை. சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.