இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக மத்திய அரசு சார்பில் பிஎம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதன்படி தற்போது வரை 18 தவணைகளாக விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 19வது தவணைத் தொகையை பிரதமர் மோடி கடந்த 24ஆம் தேதி விடுவித்தார்.

19ஆவது தவணை எப்போது வெளியிடப்படும் என விவசாயிகள் காத்திருந்த நிலையில் 9.7 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக 22,000 போடி ரூபாய் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பி எம் கிசான் ஊக்கத்தொகை 2000 ரூபாய் வழக்கமாக பயன்படுத்தி வரும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்குகளில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க கோ ஆபரேட்டிவ் அல்லது வேறு வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தாலும் அதனை சரிபார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஆதார் எண் அடிப்படையிலேயே பணம் வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றது. மொபைல் எண் விவரங்களும் சரிபார்த்த பிறகு தான் பணம் வரவு வைக்கப்படும். ஒரே பெயர், ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவை கொடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகள் இருந்தால் அதில் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பல விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பணம் வரவில்லை என்றால் உடனடியாக https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பயனாளிகள் தங்களுடைய நிலையை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.