கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தான் விஷ சாராய சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலத்தில் இருந்து மெத்தனால் வந்துள்ளது என்றால் இடைத்தேர்தலுக்காக இந்த சதித்திட்டம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது. ரயில் விபத்துக்கள் மற்றும் நீட் மரணங்களின் போது அமைச்சர்களோ பிரதமரோ ராஜினாமா செய்தார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்