திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் இருக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஹர்ஷன், சுமன் இம்ரான் ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்த சக தொழிலாளர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் தொழிற்சாலைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து வெளியேறிய சல்பைடு என்ற விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.