உத்தரப்பிரதேசம் அலிகாரில் விசித்திரமான காதல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ரோராவர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ஷாகிர் என்பவர் தனது மனைவி, நான்கு குழந்தைகள் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தனது தாயுடன் ஒரு திருமணத்திற்குச் சென்ற இவர், திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அப்போது அவரது மனைவி நான்கு குழந்தைகளுடன் காணாமல் போயிருந்தார்.

சாவி பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்ததால் கதவைத் திறந்த பின்னும் மனைவியும் பிள்ளைகளும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஷாகிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வெள்ளிக்கிழமை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது, காணாமல் போன மனைவி தனது நான்கு குழந்தைகளுடன், காதலனுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில்  சுற்றியதை வீடியோ ரீலாக ஷாகிர் பார்த்தார்.

அந்த வீடியோவில், மனைவி காதலனுடன் சுற்றிப் பார்வையிட்டு குழந்தைகள் பின்னணியில் ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது. இந்த வீடியோவை நேரடியாக தனது கணவருக்கு அனுப்பியதும், அவர் அதிர்ச்சியடைந்து மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஷாகிர் மற்றும் அவரது தாயார், ரோராவர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். அதில், மனைவி ரூ.60,000 ரொக்கம் மற்றும் நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும், தனது காதலனுடன் சேர்ந்து குடும்பத்தை விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரோராவர் காவல் நிலைய பொறுப்பாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், அப்பெண்ணையும் குழந்தைகளையும் விரைவில் கண்டுபிடித்து மீட்டுவிட எங்கள் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் விரைவாக பரவி வருகிறது.