
பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியில் சாமி முத்து(86), லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனும் மகளும் இலங்கையில் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் சாமி முத்து வீட்டில் இருந்து சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது யாரோ ஒருவர் முதியவரின் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுக்க முயற்சி செய்தபோது அந்த நபர் முதியவரை காப்பாற்றுவது போல நடித்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய நபர் சந்திரன் என்பது தெரியவந்தது. அவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து முதியவரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். மேலும் பீரோ சாவியை கொடுக்க விட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி தாக்கியது தெரியவந்தது. சந்திரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே காயம் அடைந்த முதியவரும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.