
ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வசித்து வருபவர் 9ஆம் வகுப்பு முடித்த சிறுவன்(16). இவர் படிப்பு வராததால் வீட்டில் இருந்து வருகிறார். செல்போனில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவராக சிறுவன் இருந்துள்ளார். இதனை பெற்றோர் எவ்வளவு கண்டித்தும் சிறுவன் கேட்கவில்லை. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்துள்ளனர். செல்போன் கேமால் மகனுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் பெற்றோர்கள் சிறுவனை ஈரோட்டில் உள்ள பெரிய சேமூர் பகுதியில் உள்ள சகோதரர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சென்ற பிறகும் சிறுவன் கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. மேலும் ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து தங்க விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள அவரது சகோதரர் சிறுவனிடம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு சிறுவன் வீட்டை விட்டு தனது செல்போனுடன் வெளியேறியுள்ளார். சிறுவனை காணாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் சிறுவனை காணவில்லை.
இதனை அடுத்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சிறுவன் ஈரோட்டில் இருந்து சங்ககிரிக்கு சென்று பெங்களூருக்கு ரயிலில் சென்றுள்ளார். மேலும் அங்கிருந்து உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரயிலில் சென்றதும் தெரிய வந்தது. அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் சிறுவன் தங்கி இருப்பதை அறிந்து கொண்ட காவல் துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அந்த சிறுவனை மீட்டு ஈரோட்டிற்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.
மேலும் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் சென்று தங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனிடம் அறிவுரை வழங்கி அவர்களது உறவினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.