
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா கட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கணினி பேராசிரியை டேட்டா என்ட்ரி குறித்து பாடம் நடத்தியுள்ளார். அப்போது ஒரு மாணவர் தவறாக டேட்டா என்ட்ரி செய்துள்ளார். உடனே பேராசிரியை அந்த மாணவனை கண்டித்த போது பரணிதரன் தனது செல்போனில் அதை வீடியோ பதிவு செய்துள்ளார்.
அதனை பார்த்த பேராசிரியை தன்னை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ எடுப்பதாக நினைத்து பரணிதரனை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது பரணிதரன் பேராசிரியர் காலில் இரண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதனை ஏற்காத பேராசிரியை பரணிதரணின் செல்போன் மற்றும் கல்லூரி அடையாள அட்டையை பறித்து முதல்வரிடம் புகார் அளித்து கல்லூரியில் இருந்து நீக்கம் செய்வதாக கூறி மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பரணிதரன் கல்லூரியில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் பரணிதரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பரணிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.