
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள காசிம்வயல் பகுதியில் ஜெனிபர் கிளாடிஸ் (35), கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வாழ்ந்த மீன்வியாபாரியான அலி (38) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு வருடமாக இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
ஜெனிபர், அலியிடம் திருமணம் பற்றி தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்றிரவு போதையிலிருந்த அலி வழக்கம்போல் ஜெனிபர் வீட்டுக்கு சென்றபோது, மீண்டும் திருமண பேச்சை எழுப்பியுள்ளார் ஜெனிபர். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் அலி, வீட்டில் வைத்திருந்த கத்தியால் ஜெனிபரை கழுத்து மற்றும் கையில் வெட்டி கொலை செய்துள்ளார்
பின்னர் அலி, கத்தியுடன் கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து, ஜெனிபரின் வீட்டுக்கு சென்று சடலத்தை மீட்டனர். பின்னர், சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.