
பெங்களூரில் உள்ள மடிவாள பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிய நிலையில் அதன் பின் வீடு திரும்பாததால் அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் காணாமல் போன மாணவி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தாய் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தன்மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததும் அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இவர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் இளம்பெண்ணை மீட்டு போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த மாணவி தனக்கு 18 வயது நிரம்பி விட்டதால் தன் கணவருடன் செல்ல விரும்புவதாகவும் தன் தாயாருடன் செல்ல விரும்பவில்லை எனவும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி மாணவியை கணவருடன் செல்ல அனுமதித்து உத்தரவு வழங்கினார். மேலும் இதனால் மாணவியின் தாய் ஏமாற்றத்துடன் திரும்பினார்.