
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி பிளவுபட்டு நிற்கும் நிலையில் மீண்டும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்று சேர முடியுமா என்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இதே கூட்டணி தொடரும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை. அதன் மூலமாக உரிய பங்கீடு சமூகங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திரும்பத் திரும்ப வீணாய் போன பழனிச்சாமி பற்றி கேள்வி கேட்டுவிட்டு இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகள் பற்றி கேள்வி கேட்காமல் திசை திருப்புகின்றீர்கள். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக ஓரணியில் திரண்டு வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தனியாக வேட்பாளரை நிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி இனி பலப்படும், திமுக கூட்டணிக்கு மாற்று சக்தியாக இது இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.