
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.
இப்படியான நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், திமுகவின் ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவேன். சில துரோகிகள் நாம் தேர்தலில் தோற்க பல சதி வேலைகளை செய்தனர். அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம் தான் காரணம். துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டும் பொருந்தும். ஆர்பி உதயகுமார் என்னைப் பற்றி பேசவில்லை. நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என்று அவரே கூறிவிட்டார். கூட்டத்தில் பேசும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் என்று அவர் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார் என செங்கோட்டையன் பேசியுள்ளார்.