
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் என்பது அதிகரித்து விட்டது. மேலும் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தற்போது திண்டாடி வரும் நிலையில் அவர்களை குறிவைத்து மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை நம்பி பணத்தை இழக்கும் இளைஞர்கள் ஏராளம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் https://www.omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்தை நடத்துகின்றது. இதில் தற்போதைய வேலைவாய்ப்புகள் என்ற பகுதியில் எந்தெந்த வெளிநாடுகளில் வேலை உள்ளது என்பது குறித்து அறிவிப்பும் அதிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. எனவே போலி செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.