கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இரண்டு நாட்களுக்கு முன்பு சரஸ்வதி தன்னுடைய ஸ்கூட்டரில்  மார்த்தாண்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது களியக்காவிளை அருகே வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபர் சரஸ்வதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.