கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபலமான GT மால் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அங்கு சென்ற நிலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதாவது வேட்டி சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பேண்ட் சட்டை அணிந்து வந்தால் உள்ளே அனுமதிக்கிறோம் எனவும் ஊழியர்கள் கூறிவிட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மாலுக்கு முன்பு கன்னட அமைப்பினர் வேட்டி சட்டை அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி GT மாலை தற்காலிகமாக மூடுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி அந்த மால்  7 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.