நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அருவங்காடு பகுதியில் கார் டிரைவரான கவின்குமாரும் (24) எட்ட பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (24) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிலையில் அதன் பிறகு அவர்கள் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு பெண்ணின் உறவினர்கள் சிலர் கவின்குமார் வீட்டிற்கு வந்து அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோரை தாக்கி விட்டு ரோஷினியை ஓசூருக்கு அழைத்துச் சென்றனர். உடனே ஓசூருக்கு புறப்பட்ட போலீசார் அங்குள்ள ஒரு வீட்டிலிருந்து ரோஷினியை மீட்டனர். பிறகு அவரை கடத்திச் சென்ற ரோஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன், தாயார் சாந்தி, தாய்மாமன் மற்றும் உறவினர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். காதல் திருமணம் செய்த பெண்ணை உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.