மதுரை மாவட்டம் வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. இதன் அருகே முட்புதரில் ஒரு துண்டிக்கப்பட்ட தலைக்கிடந்துள்ளது. அதன் பிறகு 100 மீட்டர் தொலைவில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது அழகேந்திரன் (21) என்பது தெரியவந்தது. பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். இவர் கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில் அழகேந்திரன் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் உறவினரான பிரபாகரன் (27) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பிரபாகரன் காதலை கைவிடுமாறு அழகேந்திரனை கண்டித்துள்ளார்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அழகேந்திரனை பிரபாகரன் தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த வாளால் வாலிபரின் தலையை பிரபாகரன் துண்டித்தார். பின்னர் தலையை ஒருபுறமும் உடலை 100மீ தொலைவில் மற்றொரு புறமும் வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வாலிபரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் அமைப்பினர் அழகேந்திரன் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினர். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். மேலும் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.