
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்தனர். அப்போது ஆண் நண்பர் ஒருவருடன் தெய்வானைக்கு பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வீரமணிக்கு தெரிய வந்த நிலையில் அவர் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் அதைக் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் செல்போனில் தன்னுடைய ஆண் நண்பருடன் தெய்வானை பேசி உள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் வீரமணி ஒரு கட்டையால் தன் மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார். அதன் பின் தன்னுடைய தம்பி சதீஷை வீரமணி அழைத்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். பின்னர் இருவரும் தெய்வானை தூக்கு போட்டுக் கொண்டதாக கூறி நாடகம் ஆடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணின் உடம்பில் காயம் இருப்பதை கண்ட மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணி மற்றும் சதீஷிடம் விசாரணை நடத்தியதில் தெய்வானை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.