
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள ஒரு பகுதியில் பேச்சி முத்து (30)என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா (28) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மூடப்பள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தனர். அப்போது சுதாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பேச்சிமுத்துவுக்கு தெரிய வந்த நிலையில் அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணவன் மனைவிக்கு இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அதாவது குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் தன் மனைவியை கண்டிக்க அவர் ஆத்திரத்தில் சேலையால் கழுத்தை நெறித்து அவரை கொலை செய்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது சேலையை சுதா மறைத்து வைத்துவிட்டு தன் கணவர் குளிர் காய்ச்சல் வந்து இறந்து விட்டதாக கூறினார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து சுதாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது. அப்போது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.