
மத்தியப்பிரதேச மாநிலம் டமோ மாவட்டத்தைச் சேர்ந்த மதியாடோ கிராமத்தைச் சேர்ந்த பர்மாலால் கோரி என்பவர், அரசு பள்ளி ஆசிரியராக நியமனம் பெற 17 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினார். கடந்த 1988 ஆம் ஆண்டு சிவ்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய இவர், பள்ளி மூடப்பட்ட பிறகு தனக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்காக நீதிமன்றத்தை நாடினார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ‘குருஜி தகுதி தேர்வில்’ தேர்ச்சி பெற்ற இவர், ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அப்பீல் நீதிமன்றம் பர்மாலாலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, டமோ மாவட்ட கல்வி அலுவலகம், 2025 ஏப்ரல் 15ஆம் தேதி, அவரை ஒப்பந்த அடிப்படையிலான 3ம் நிலை ஆசிரியராக நியமிக்க ஆவணங்களை சமர்ப்பிக்க அழைத்தனர்.
எனினும், அதற்குமுன் ஏப்ரல் 12ஆம் தேதி, பர்மாலால் கோரி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவரது மகன் சுபம் கோரி, தனது தந்தையின் கல்வி சான்றிதழ்களோடு இறப்பு சான்றிதழையும் தூக்கி அலுவலகத்துக்கு சென்றார். இதை பார்த்த அனைவருக்கும் கண்களில் நீர் வடிய செய்த அந்த தருணம், அவரது குடும்பத்தின் துயரத்தை வெளிக்கொணர்ந்தது.
தனது குடும்பத்தை வறுமையிலிருந்து உயர்த்த ஆசிரியர் வேலைவேண்டும் என்ற பர்மாலாலின் கனவு, இறுதியில் வெற்றியடைந்தாலும், அதனை அனுபவிக்கவே முடியவில்லை. தன்னுடைய வாழ்நாள் முழுக்க காத்திருந்த அந்த வேலைக்கு ஒருநாளும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காமல் அவர் உயிர் பிரிந்திருப்பது சோகமாகும்.