
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம் பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக அந்தப் பெண் தினமும் மெட்ரோ ரயிலில் பணிக்கு செல்லும் போது, கார்த்திக் (30) என்ற இளைஞர் தொடர்ச்சியாக அவளை பின் தொடர்ந்து, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் கார்த்திக்கை அடையாளம் கண்டனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், அண்ணா சாலையில் உள்ள கார் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருவதாகவும், மெட்ரோ ரயிலில் தினமும் வேலைக்கு செல்லும் போது இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.