விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி பகுதி நேர வேலைக்காக ஒரு தனியார் கம்பெனியில் விண்ணப்பித்திருந்தார். அப்போது தன்னுடைய செல்போன் நம்பரை அதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் நம்பருக்கு மர்ம நபர்கள் இருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மாணவி வேலைக்காக விண்ணப்பித்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாண்டியராஜன் (34), சந்துரு (24) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.