மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார்.

பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் கொட்டுவதற்காக சென்ற போது கடும் வெயிலின் தாக்கத்தால் மணிவேல் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அங்கு கிடந்த கல் ஒன்றின் மேல் மணிவேல் விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் அவசர உதவி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மணிவேலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.