
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் தாலுகாவில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பாலவாக்கத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். இந்நிலையில் நேர்காணல், மருத்துவ பரிசோதனை என கூறி டெல்லி, வாரணாசி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று போலியான பணி நியமன ஆணை, அடையாள அட்டைகளை கொடுத்தார்.
ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதற்காக என்னிடம் இருந்து 24 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சாகுல் ஹமீதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.