முதல்வர் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தக்கூடிய சிபிஎஸ்சி பள்ளிகள் மூலமாக பணம் சம்பாதிக்க மும்மொழி வேண்டும், இந்தப் பக்கம் மக்களை ஏமாற்றுவதற்கு இருமொழி என்ற நிலைப்பாடு கொண்டிருப்பதாக ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்ற நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச். ராஜா, தமிழகம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த போது வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சம் ஆக இருந்தது. 2019 ஆம் ஆண்டு அது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அப்படியே படிப்படியாக உயர்ந்து யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் தற்போது 12.75 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பந்தில் வீர தமிழச்சி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளார்.

அதனால் மத்திய அரசுக்கு நேரடி வருவாய் ஒரு லட்சம் கோடி குறைந்துள்ள போதும் மறுபுறம் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் நிதி இருப்பு இருக்கும். இதனால் பொருளாதாரம் உயரும். தமிழகத்தில் பொழுது போகவில்லை என்றால் மொழி பிரச்சனையை கையில் எடுத்து கொள்வது வாடிக்கையாக இருக்கின்றது. ஸ்டாலின் இரு மொழிக் கொள்கையை ஏற்பவர் என கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தக்கூடிய சிபிஎஸ்சி பள்ளிகளில் சமச்சீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் நான் ஈடுபடுவேன். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சிபிஎஸ்சி பள்ளிகளில் இருக்கலாம் என்றால் அரசு பள்ளிகளில் ஏன் மும்மொழி பாடத்திட்டம் அமலில் இருக்கக் கூடாது என்று ஹெச்.ராஜா பேசியுள்ளார்.