மலையாள திரைப்பட நடிகரும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவருமான ஷைன் டாம் சாக்கோ, கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து போலீசாரை பார்த்ததும் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட மயக்கவியல் தடுப்புப் படை (DANSAF) குழுவினர் ஹோட்டலில் டிரக் இருப்பதற்கான தகவலின் பேரில் சோதனை செய்தனர். அப்போது ஷைன் டாம்  முதலில் இரண்டாவது மாடி பாராபெட்டில் விழுந்த பிறகு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குதித்து, அதன் பின் லாபியில் இருந்து ஓடிச் சென்றதாக சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவரது அறையில் எந்த போதைப்பொருளும் மீட்கப்படவில்லை என்றாலும், ஷைன் டாம் சாக்கோ தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதனால், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன்  அனுப்பும் முடிவில் போலீசார் உள்ளனர்.

இதையடுத்து, நடிகை வின்ஸி அலோஷியஸ், ஷைன் டாம் தமக்கு திரைப்பட படப்பிடிப்பின் போது போதை உச்ச நிலையில் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ள விவகாரமும் மீண்டும் எழுந்துள்ளது. இந்த புகாரை அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட்ஸ் (AMMA) அமைப்பின் உள் முறை விசாரணைக் குழு (ICC) ஆராய்கிறது.

ஷைனின் தாயார் மாரியா, “அவனை நான் நன்றாகவே அறிவேன். அவன் பயந்திருக்கலாம். போலீசார் சீருடை இல்லாமல்தான் வந்தார்கள். அவர்களால் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா?” கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷைன் டாம் சாக்கோ 2015-ல் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் 2025 பிப்ரவரியில், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரும் மற்ற குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த வழக்கில் போலீசார் பிழைகள் செய்துள்ளதாகவும், அதனால்தான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதாகவும் எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.